அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி : "நான் யாருன்னு தெரியும்ல" ... வாயால் கெட்ட "பில்டப்" ஆசாமி

0 5493

ரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கரை லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, அரசியல் கட்சிப் பிரமுகரின் பெயரைச் சொல்லி மிரட்டிய சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டான்.

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூரைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண், பட்ட படிப்பு முடித்து தகுதியான வேலையைத் தேடி வந்துள்ளார்.  இடையில் சென்னையில் தற்காலிகமாக அவர் பணிபுரிந்த ஓட்டல் ஒன்றில், பள்ளிக்கரணையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவனும் பணியாற்றி வந்துள்ளான்.

இருவருக்கும் அப்போது நட்பு ஏற்பட்டுள்ளது. பில்டப் விடுவதில் மன்னனான ராஜேஷ், தனக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்களைத் தெரியும் என்றும் அதிகாரிகள் மட்டத்திலும் போலீசார் மட்டத்திலும் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது என்றும் தேன்மொழியிடம் கதை அளந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நின்ற ராஜேஷ், தேன்மொழியை தொடர்பு கொண்டு, தலைமைச் செயலகத்தில் அரசு வேலை காலியாக இருக்கிறது என்றும் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து, அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளான்.

அதனை நம்பிய தேன்மொழியிடம் நான்கரை லட்ச ரூபாயை பெற்றுக் கொண்ட ராஜேஷ், அவருடைய உறவினர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்ச ரூபாய் வரை வாங்கினான் என்று கூறப்படுகிறது.

ஆனால் சொன்னபடி வேலையை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் அலைக்கழித்து வந்த ராஜேஷ், பணம் குறித்து போன் செய்யும்போது எல்லாம் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, மிரட்டி வந்துள்ளான்.

ராஜேஷ் மீது கந்திலி காவல் நிலையத்தில் தேன்மொழி புகாரளித்த நிலையில், அங்கு எழுத்தராகப் பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் அதுகுறித்து ராஜேஷுக்கு ரகசியமாக தகவல் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து தேன்மொழியை போனில் அழைத்த ராஜேஷ், ஏன் தன் மீது புகார் கொடுத்தாய் என மிரட்டியுள்ளான். தம் மீது யார் எங்கே புகார் கொடுத்தாலும் தனக்குத் தெரியவந்து விடும் என்றும், தன்னுடைய அரசியல் கட்சி பலத்தைக் கொண்டு அதனை தனக்கு சமாளிக்கத் தெரியும் என்றும் உதார் விட்ட ராஜேஷ், தேன்மொழியை பயமுறுத்துவதற்காக அவரை இணைப்பில் வைத்துக் கொண்டே காவலர் சீனிவாசனுக்கு போன் செய்து புகார் நகலை படிக்குமாறு கூறியுள்ளான். சீனிவாசனும் அந்த புகார் நகலை அப்படியே படித்துள்ளார்.

தாம் கொடுக்கும் பில்டப்புகளால் தேன்மொழி பயந்துவிடுவார் என எண்ணிய ராஜேஷின் கணக்குத் தப்பாகிப் போனது. அவனுடைய பேச்சுகள் சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், தேன்மொழியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கவே, உடனடியாக ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பறந்தது.

இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார், மோசடி, கொலை மிரட்டல், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரின் சிறப்பு கவனிப்புக்குப் பிறகு தாம் பணம் வாங்கி ஏமாற்றியது உண்மைதான் என்றும் தாம் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளான் ராஜேஷ்.

தேன்மொழி கொடுத்த புகாரை மேலதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் அப்படியே அச்சு பிசகாமல் ராஜேஷிடம் படித்துக் காட்டிய காவல் நிலைய எழுத்தர் சீனிவாசன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments